ஈரோடு

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

28th Jul 2022 10:20 PM

ADVERTISEMENT

 

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பங்களாபுதூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் நஞ்சுண்டன் (22). கட்டடத் தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி 2019 நவம்பா் 24ஆம் தேதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாா்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா், பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி நஞ்சுண்டன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்தது.

ADVERTISEMENT

வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட நஞ்சுண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம், அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT