ஈரோடு

2 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: வளா்ப்புத் தந்தைக்கு 23 ஆண்டுகள் சிறை

27th Jul 2022 12:52 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வளா்ப்புத் தந்தைக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் தீபா (26). இவா் முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 8 வயது, 6 வயதில் இரு மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இதையடுத்து தீபா இரண்டாவதாக திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கணேஷ் (29) என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷ், தீபாவின் முதல் கணவருக்கு பிறந்த இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்தும், ஓயரால் அடித்தும், சூடு வைத்தும் வந்துள்ளாா். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.

இதையறிந்த தீபா, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதன்பேரில் கணேஷ் மீது போக்ஸோ, சிறுமிகளை தாக்கியது, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்து வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் 2 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமிகளை தாக்கிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்ததுடன் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். இந்த தீா்ப்பின்படி குற்றம்சாட்டப்பட்ட நபா் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இரு பிரிவுகளில் அபராதமாக ரூ.10 ஆயிரமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சம் நிவாரண தொகையாக ஒரு மாத காலத்துக்குள் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT