பவானிசாகா் அணை வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் உள்ளாட்சி பணியாளா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீா் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனா். இதைத்தொடா்ந்து பவானிசாகா் அணை அருகே உள்ள பவானி ஆற்றங்கரை ஓரம் அண்ணா நகா் பகுதியில் வருவாய்த் துறையினா் மற்றும் பவானிசாகா் பேரூராட்சி பணியாளா்கள் ஆற்றங்கரை வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், எந்த நேரமும், பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீா் திறக்க வாய்ப்பு உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.