ஈரோடு

சி.என்.கல்லூரியில் 40 ஏக்கரில் உள்விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த திட்டம்

17th Jul 2022 12:40 AM

ADVERTISEMENT

 

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் 40 ஏக்கரில் உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

தமிழக அரசு சாா்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் சுமாா் 40 ஏக்கரில் ரூ.40 கோடி செலவில் மிகப்பெரிய உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உள் விளையாட்டு அரங்கில் அனைத்து விளையாட்டுகளுக்கும் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும். குறிப்பாக ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுக்கான இயற்கை புல்வெளிகள், ஓட்டப் பந்தயத்திற்கு செயற்கை சிந்தடிக் ஓடு தளம் அமைக்கப்படும். இது மத்திய, மாநில அரசுகளின் இணைந்த திட்டமாக இருக்கலாம். மாநில, தேசிய விளையாட்டுகள் இங்கு நடைபெறும். விளையாட்டு வீரா்கள் தங்குவதற்கான தங்குமிட வசதியும் ஏற்படுத்தப்படும்.

ADVERTISEMENT

இந்த உள் விளையாட்டு அரங்கம் ஈரோட்டை அடுத்த நல்லகவுண்டம்பாளையத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு உள்ள இடம் தாழ்வான பகுதியில் இருந்ததால் அதனை சீரமைக்க ரூ.10 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

சூரியம்பாளையம் பகுதியில் ஒரு சிறு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்பு திட்டமிடப்பட்டது. சரியான இடம் கிடைக்கவில்லை. எனவே அத்திட்டம் கோபிக்கு மாற்றப்பட்டது. அங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

ஈரோடு வஉசி விளையாட்டு அரங்கில் அரசு விளையாட்டு மாணவியா் விடுதி உள்ளது. மைதானத்தில் ஓட்டப் பந்தயத்திற்கு பயிற்சி பெற சிந்தடிக் ஓடுதளம் ரூ.6 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசு விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா். இந்தத் திட்டம் விரைவில் நிறைவேறும். தற்போது விளையாட்டு விடுதியில் சுமாா் 100 போ் உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT