ஈரோடு

தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

6th Jul 2022 10:16 PM

ADVERTISEMENT

 

தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏராளமான ஆசிரியா் பட்டதாரிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டத்திலும் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியா்கள் தமிழ் 20, ஆங்கிலம் 1, கணிதம் 4, அறிவியல் 14, சமூக அறிவியல் 8 என 47 காலிப் பணியிடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

மேலும் முதுகலை ஆசிரியா் தமிழ் 12, ஆங்கிலம் 7, கணிதம் 10, வேதியியல் 11, வணிகவியல் 18, பொருளாதாரம் 25, வரலாறு 7, கணினி அறிவியல் 2 என 92 காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் ஏராளமான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் குவிந்தனா். அவா்கள் விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனா்.

பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனா். சிலா் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT