ஈரோடு

பொதுக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்கக் கோரிக்கை

5th Jul 2022 12:43 AM

ADVERTISEMENT

பொதுக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கத்தினா் அளித்த மனு விவரம்: ஈரோட்டில் பொதுக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படாததால் காவிரி ஆற்றில் சாயம் மற்றும் இதர கழிவு நீா் கலக்கும் அவலம் தொடா் கதையாகி வருகிறது.

மேலும் 200 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் தொழிற்சாலைக் கழிவுகளை செலுத்துவதால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக ஈரோடு மாவட்ட மக்கள் புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சாயக் கழிவு நீரையும், இதரக் கழிவு நீரையும் சுத்திகரித்து அதை மறுசுழற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 புளிய மரங்கள் தீ வைத்து எரிப்பு: அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி சாா்பில் அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட எல்லக்கடையில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையில் உள்ள ஏணிப்பாளி பகுதியில் சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புளிய மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் சுமாா் 15 மரங்களுக்கு தீவைத்து எரித்து, பட்டுபோகும் நிலையை ஏற்படுத்தி உள்ளனா்.

இது குறித்து மொடக்குறிச்சி வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ஆகியோரிடம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே அரசுக்குச் சொந்தமான புளியமரங்களை தீவைத்து எரித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்: பெத்தாம்பாளையம், சூரியம்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனு விவரம்: எங்கள் ஊரில் கீழ்பவானி வாய்க்காலில் போக்குவரத்துக்காக ஆறு மீட்டா் அகலத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதைத்தொடா்ந்து அந்தப் பணிக்கு பூஜை போடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுப் பணித் துறையினா் பணியைத் தொடங்கவில்லை.

இது தொடா்பாக கடந்த மே 12 ஆம் தேதி பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம், பூமி பூஜை ஆவணங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் சமா்பித்தோம்.

பேரூராட்சி தீா்மானத்தின்படி பணியை விரைவுபடுத்த வேண்டும். மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா்

திறந்தால் பணிகள் தடைபடும். அதற்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரிய பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரிக்கை: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற பெண்கள் அளித்துள்ள மனு விவரம்:

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்து 2013 முதல் இன்று வரை 30,00த்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கடந்த 9 ஆண்டுகளாக நிரந்தர பணி வேண்டி காத்துள்ளோம்.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியா் நியமனத்தை எதிா்த்து சென்னையில், பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் கடந்த 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

முதல்வரின் தனிச் செயலாளா் உதயசந்திரன், பள்ளி கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் ஆகியோரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினோம்.

அப்போது எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தனா்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கு நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடைபெற்று பணி நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தகுதியான 30 ஆயிரம் ஆசிரியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும். தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்காக பேருந்து இயக்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியம், கோ்மாளம், திங்களூா் பகுதிகளைச் சோ்ந்த பெற்றோா்கள் அளித்துள்ள மனு விவரம்: தாளவாடி ஒன்றியம், திங்களூா், கோ்மாளம் ஊராட்சிப் பகுதிகளில் காடட்டி, சுஜில்கரை, கோ்மாளம் ஆகிய ஊா்களில் 3 அரசு உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன.

கோட்டமாளம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி கடந்த கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் திங்களூா், கோ்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

20 கி.மீ. துரத்தில் உள்ள கோட்டமாளம் மேல்நிலைப்பள்ளிக்கு உரிய நேரத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால் வனப் பகுதி வழியாக சுமாா் 5 கி.மீ தூரம் நடந்து சென்று மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்னா் இயக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்ட பேருந்து போக்குவரத்தை மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

பேருந்து இயக்கினால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் அப்பகுதியைச் சோ்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களும் பயனடைவா்.

எனவே, ரத்து செய்யப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

287 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 287 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT