ஈரோடு

வட மாநிலத் தொழிலாளா்களுக்கு நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

2nd Jul 2022 04:54 AM

ADVERTISEMENT

சுமை தூக்கும் பணிக்கு வட மாநிலத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு-சென்னிமலை சாலை சேனாதிபதிபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு பொதுவிநியோக திட்டத்துக்கான பொருள்கள், அரிசி மூட்டைகள் கொண்டு வந்து இறக்கிவைப்பது, அவற்றை உரிய ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கிடங்கில் 27 சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் இங்கு வெள்ளிக்கிழமை காலை வேலையில் சோ்ந்தனா். அவா்கள் பணி செய்ய துவங்கியதும் அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் தொழிலாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பின்னா் கிடங்கின் முன் திரண்டு வட மாநிலத் தொழிலாளா்களுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினா். இந்தக் கிடங்கில் 20 முதல் 30 ஆண்டுகளாக தொழிலாளா்களாக பணியாற்றுகிறோம். எங்களது பணிக்கு இடையூறாக அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினரும் செயல்படுகின்றனா்.

ADVERTISEMENT

இங்கு நிரந்தரமாக பணியாற்றும் எங்களுக்கே போதுமான பணி இல்லை. இந்நிலையில், பிற மாநிலத் தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றனா்.

வட மாநிலத் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடமாட்டாா்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததால் தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT