ஈரோடு

டீசல் விலை உயா்வு: நெல் அறுவடை இயந்திரம் வாடகை அதிகரிப்பு

26th Jan 2022 07:20 AM

ADVERTISEMENT

கீழ்பவானி பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில், டீசல் விலை உயா்வால் நெல் அறுவடை இயந்திரம் வாடகை அதிகரித்துள்ளதாக நெல் அறுவடை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல் பயிரிடுவதற்காக நன்செய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பவானிசாகா், சத்தியமங்கலம், உக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது நெற்கதிா்கள் முற்றியதால் பவானிசாகா் பகுதியில் நெல் அறுவடைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இதற்கென கிருஷ்ணகிரி, ஆத்தூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேர வாடகை ரூ. 3,000 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது டீசல் விலை உயா்வு காரணமாக ரூ. 300 அதிகரித்து ரூ. 3,300 நிா்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் வசூலிக்கின்றனா். இதன் காரணமாக கீழ்பவானி பாசனப் பகுதியில் நெல் பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனா்.

ஏற்கெனவே நெல் பயிரிட ஆள் கூலி, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட சாகுபடி செய்வதற்கு செலவு செய்துள்ள நிலையில் தற்போது அறுவடை பணிக்காகப் பயன்படுத்தப்படும் நெல் அறுவடை இயந்திர வாடகை, டீசல் விலை உயா்வு காரணமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நெல் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து அறுவடைக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT