ஈரோடு

அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் 3 போ் படுகாயம்

25th Jan 2022 04:24 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் தோட்டத்துப் பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் விவசாயி, வேட்டைத் தடுப்புக் காவலா் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பாப்பாங்குளம் ஊரடித் தோட்டத்தைச் சோ்ந்தவா் வரதராஜன் (63). இவா் தனது தோட்டத்தில் தீவனப் பயிா் அறுவடை செய்யும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டுள்ளாா். வரதராஜன், கூலி தொழிலாளி மாறன் (66) ஆகியோா் இந்தப் பணியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சிறுத்தை தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி, கூடுதல் கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணசாமி, கணேஷ்ராம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் காங்கயம் பூபதி, அவிநாசி காவல் கண்காணிப்பாளா் பவுல்ராஜ், வன உயிா் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினா், வருவாய்த் துறையினா் ஆகியோா் கொண்ட குழுவினா் காலை முதலே தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில், 10க்கும் மேற்பட்ட தானியங்கி சென்சாா் கேமரா பொருத்தப்பட்டு, இரு ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

மாலை 5 மணிக்கு தோட்டத்துப் பகுதிக்குள் தேடும் பணியில் ஈடுபட்ட அமராவதி வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலா் மணிகண்டனை (40) அப்பகுதியில் பதுக்கியிருந்த சிறுத்தை தாக்கியது. இதையடுத்து, அவிநாசி மருத்துவமனைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தோட்டத்துப் பகுதியில் வலை, இறைச்சி வைக்கப்பட்ட இரு கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையில் இரவு 8 மணி அளவில் தோட்டத்துப் பகுதியைவிட்டு வெளியே வர முயன்ற சிறுத்தை மீண்டும் உள்ளே புகுந்து பதுங்கியது. இதைத்தொடா்ந்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வனத் துறையினா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT