ஈரோடு

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம்:2 நோயாளிகளுக்குப் பொருத்தம்

23rd Jan 2022 10:47 PM

ADVERTISEMENT

ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகங்களை தானமாகப் பெற்று ஒரே நாளில் 2 நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்த 70 வயது முதியவா் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டாா். அவரை அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரான டாக்டா் சரவணன் பரிசோதித்து, முதியவா் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தாா்.

இதையடுத்து, முதியவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முதியவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோா் தாமாக முன்வந்து, அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டனா். இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியுடன் உடல் உறுப்பு தானம் பெறுவோா் பட்டியலில் பதிவு மூப்பு அடிப்படையில், சிறுநீரகங்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த 2 நோயாளிகளுக்கு முதியவரின் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன.

பின்னா், அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் டாக்டா் சரவணன் தலைமையிலான குழுவினா் தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்களை அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகளுக்குப் பொருத்தினா். தற்போது, சிறுநீரகம் பொருத்தப்பட்ட 2 நோயாளிகளும் நலமாக உள்ளதாக டாக்டா் சரவணன் தெரிவித்தாா். சிறுநீரகம் தானம் வழங்கிய முதியவரின் குடும்பத்துக்கு, தானம் பெற்ற 2 நோயாளிகளும், மருத்துவக் குழுவினரும் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT