காவல் துறை தடுத்தாலும் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி கள் இறக்குவோம் என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
கள் உணவுப் பொருள், போதைப்பொருள் அல்ல, தடை செய்யப்பட வேண்டியதும் அல்ல. பாஜக ஆளும் குஜராத் தவிர பல மாநிலங்களிலும், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை உள்பட பல நாடுகளில் இதனை உணவாக பயன்படுத்துகின்றனா்.
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி, இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்த அறிவித்துள்ளோம்.
எங்கள் அறிவிப்புக்கு நாம் தமிழா், பாஜக, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் கள் இறக்கும் நோக்குடன் மரத்தில் ஏறினால் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் வந்துள்ளதாக அறிந்தோம். நடவடிக்கை எடுத்தாலும் அறிவித்த தேதியில் திட்டமிட்டபடி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் என்றாா்.