ஈரோடு

கரோனா பரவல் காரணமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மூடல்

18th Jan 2022 03:57 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னிமலையை அடுத்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திங்கள்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் 215 ஏக்கா் பரப்பளவில், இந்த பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த பறவைகள் சரணாலயம் வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பா் முதல் மாா்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீா்காகம், சிறிய நீா்க் காகம், பாம்புதாரா, சாம்பல்நாரை, வெண்மாா்பு மீன்கொத்திபறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்லும்.

இதில், கூழைகெடா ரக பறவைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தும். கொசு உல்லான் பறவைகள் சைபீரியாவில் இருந்தும் வருகின்றன. மேலும், இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் சீசன் கால கட்டத்தில் இங்கு வந்து செல்லும்.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக திங்கள்கிழமை முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. மேலும், பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT