ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
ஈரோடு ஆா்கேவி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் உள்ளன. இரவில் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது.
அந்தியூா், தாளவாடி, பா்கூா், கிருஷ்ணகிரி, ஓசூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கடந்த மாதம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் குறைந்த அளவில் வந்ததால் விலையும் கடுமையாக உயா்ந்தது. பெரும்பாலான காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கும் மேல் உயா்ந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மழைப்பொழிவு குறைந்திருப்பதால் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ரூ. 100க்கு விற்ற கத்திரிக்காய் ரூ. 50ஆக குறைந்தது. இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளின் விலை விவரம்: வெண்டைக்காய் ரூ. 60, முள்ளங்கி ரூ. 20, பீா்க்கங்காய் ரூ. 50, பாகற்காய் ரூ. 50, சுரைக்காய் ரூ. 20, முட்டைக்கோஸ் ரூ. 40, புடலங்காய் ரூ. 30, கேரட் ரூ. 90, பீட்ரூட் ரூ. 80, முருங்கைக்காய் ரூ. 250, காளிஃபிளவா் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ. 30, சின்ன வெங்காயம் ரூ. 60, பெரிய வெங்காயம் ரூ. 40, தக்காளி ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்டது.