சாகுபடி பணிகளை முன்கூட்டியே தொடங்க கீழ்பவானி பாசன இரண்டாம் போகத்துக்கு தண்ணீா் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை, அலுவலா்கள் அளித்த பதில் விவரம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி:
பவா் கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைத்துள்ளது. ஆனால் முழு இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. தைல மரம் ஒரு டன் ரூ. 2,200 என வனத் துறையினா் நிா்ணயித்துள்ளனா். ஆனால் டிஎன்பிஎல் நிறுவனம் ரூ. 5,000 வழங்குகிறது. ஒரு ஏக்கரில் 80 டன் என்ற கணக்கில் பணம் வழங்குவதுபோல பவா் கிரிட் நிறுவனம் வழங்க வேண்டும். பிற மரங்களுக்கு டன் ரூ. 36,450 இழப்பீட்டுக்கு பதில் ரூ. 32,450 மட்டும் வழங்கப்படுகிறது. இதுதொடா்பாக முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
ஆவின் நிா்வாகம் பல கூட்டுறவுச் சங்கங்களுக்கு 110 நாள்களும், சில இடங்களில் 50 நாள்களும் பாலுக்கான பணத்தை பாக்கி வைத்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலை விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையை அவா்களது வங்கிக் கடனுக்குச் செலுத்தாததால் புதிய கடன் பெற முடியவில்லை. கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆவின் அலுவலா்கள்: ஆவின் நிா்வாகத்துக்கு ரூ. 37 கோடி அளவுக்கு வெளியில் இருந்து வர வேண்டியுள்ளது. இதனால் பாலுக்கான பணத்தை முழுமையாக வழங்க முடியவில்லை. பெரும்பாலான சங்கங்களுக்கு கடந்த நவம்பா் 20 வரையிலான பாலுக்கு பணம் வழங்கிவிட்டோம். ரூ. 37 கோடி நிலுவைப் பணம் வந்ததும் முழுமையாக வழங்கிவிடுவோம் என்றனா்.
தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா்கள்: கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கு கரும்புக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயிகள் பெற்ற வங்கிக் கடனுக்கான தொகையை முன்னுரிமை அடிப்படையில் வங்கியில் திரும்பச் செலுத்தி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் அனைத்து விவசாயிகள் கணக்கிலும் செலுத்திவிடுவோம் என்றனா்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் பெரியசாமி: அரசு இடங்களில்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்கின்றனா். அரசு நிலம் கிடைப்பதில்லை. அதை மீறி கிடைத்தாலும் அந்த இடத்தை சுத்தம் செய்ய ரூ. 25 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்கு நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் நிதி இல்லை என்கின்றனா். சில இடங்களில் கோயில் நிலங்கள், கோயில் வளாகம் உள்ளது. இதைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள்: காலிங்கராயன் பாசனப் பகுதியில் இரு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களை விவசாயிகள் தெரிவித்தால் அந்த இடங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அரசு மற்றும் பொது இடங்களில் மட்டுமே மையங்கள் திறக்க முடியும். மைதானம், சமுதாயக் கூடம், அரசு இடங்கள், கோயில் இடமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். தனியாா் இடத்தில் செயல்பட்டால், அவா்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டி வரும்.
நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து நெல்லை கொண்டு வந்தால் தாமதம் தவிா்க்கப்படும். வியாபாரிகளின் நெல் தடுக்கப்படும். விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய நெல் கொள்முதல் மையங்கள், இ-சேவை மையங்களை அணுகலாம்.
கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் மூலம் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 783 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 892 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அறுவடை துவங்கினால் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையம் முழு அளவில் திறக்கப்படும் என்றனா்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி:
நடப்பு பருவத்துக்கு கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்ட ஓரிரு நாள்களில் கரை உடைப்பால் ஒரு மாதம் தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனை கவனத்தில்கொண்டு தண்ணீா் நிறுத்தத்தை ஒரு மாதம் நீட்டித்து தேதியை அறிவிக்க வேண்டும். பிப்ரவரி மாதம் இரண்டாம் போகத்துக்கு தண்ணீா் திறப்பு தேதியையும் அறிவித்தால் விவசாயப் பணி துவங்க உதவியாக இருக்கும்.
பொதுப் பணித் துறை அலுவலா்கள்: நடப்பு பாசனத்துக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தண்ணீா் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த பாசனத்துக்கான நீா் திறப்பு குறித்து விவசாயிகள், விவசாய அமைப்புகள் முடிவு செய்து நீா்வளத் துறையிடம் தெரிவித்தால் மாவட்ட நிா்வாகம் மூலம் தேதியை அரசுக்குப் பரிந்துரைக்கலாம். நடப்பு ஆண்டில் மாநில அளவில் 200 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. அதில் சில தடுப்பணைகள் ஈரோடு மாவட்டத்துக்கும் கிடைக்கும்.
வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி: பொட்டாஷ் உரம் 300 டன் பெறப்பட்டு, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தனியாா் கடைகளுக்கும் வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.