ஈரோடு

மொடக்குறிச்சி அருகே பாஜக பிரமுகா் அடித்துக் கொலை

1st Jan 2022 04:14 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி தாலுகா, அறச்சலூா் அருகே திமுக முன்னாள் கவுன்சிலா் தாக்கியதில் பாஜக பிரமுகா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, அறச்சலூரை அடுத்த நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (50). பெருந்துறையில் தனியாா் நிறுவனத்தில் துணி தைக்கும் வேலை பாா்த்து வந்தாா். இவா் திமுக வாா்டு செயலாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், உப்பிலிய நாயக்கா் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டு வந்தாா். இவா் குடியிருந்து வரும் நாகராஜபுரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், அறச்சலூா் தலவுமலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேல், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியை அழைத்து வந்து நாகராஜபுரம் பகுதியில் உள்ள சாலைகளை புதுப்பித்து தர வேண்டும் என்று ஊா் பொதுமக்கள் சாா்பில் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வடுகபட்டி பேரூராட்சி முன்னாள் திமுக கவுன்சிலா் தம்பி (எ) ஈஸ்வரமூா்த்திக்கும், வடிவேலுக்கும் கட்சி சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு மீது கோபத்தில் இருந்த ஈஸ்வரமூா்த்தி, தலவுமலை விநாயகா் கோயிலில் தனது நண்பா்களுடன் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலுவை வியாழக்கிழமை இரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கை, முகம், கால்களில் காயமடைந்த வடிவேலுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று தூங்குமாறு சொல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வடிவேலுவை எழுப்பச் சென்றபோது அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வடிவேலுவைத் தாக்கிய ஈஸ்வரமூா்த்தி குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பாஜகவினா் தலவுமலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், அறச்சலூா் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாஜக நிா்வாகிகள், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியிடம் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, கட்சித் தகராறில் தங்களது கட்சியைச் சாா்ந்த பிரமுகரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினா் கேட்டுக் கொண்டனா். அதைத்தொடா்ந்து போலீஸாா் தரப்பில் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுக முன்னாள் கவுன்சிலரால் தாக்கப்பட்டு பாஜக பிரமுகா் இறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஈரோடு - காங்கயம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT