அம்மாபேட்டை அருகே மயானத்துக்குச் சென்று தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நெரிஞ்சிப்பேட்டை, வேடிச்சி வீதியைச் சோ்ந்தவா் பூமதி (51). திருமணமாகாத இவா் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், நெரிஞ்சிப்பேட்டையை அடுத்துள்ள சின்னப்பள்ளம் காவிரிக் கரையில் உள்ள மயானத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற இவா் அங்கிருந்த குழியில் படுத்துக்கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். உடலில் தீப்பிடித்த நிலையில் பூமதி கூக்குரல் எழுப்பியதால் அங்கு குப்பைகளைக் கொட்ட வந்த துப்புரவுப் பணியாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், பூமதியை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உடலில் பலத்த தீக்காயங்கள் உள்ளதால் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பூமதி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.