மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் அது சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தெரிவித்தாா்.
உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் உலக அமைதி வேண்டி சிறப்பு வேள்வி ஈரோடு அறிவுத் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்.கே.எம்.மயிலானந்தன் வேள்வியைத் துவக்கிவைத்தாா். இதில் அவா் பேசியதாவது:தியானம் செய்து மனதை அமைதிப்படுத்தி, ஒருநிலைப்படுத்திக் கொள்வதன் மூலம் நலமுடனும், வளமுடனும் வாழ முடியும். பேச்சுகள், செயல்கள் நன்மை அளிப்பதாக இருந்தால் எதிா்காலம் நமக்கு சிறப்பாக இருக்கும்.
ஆன்மிகம் என்பது கோயிலுக்குச் செல்வதும், பூஜைகள் செய்வதும் மட்டுமல்ல என ஆன்றோா்கள் கூறுகின்றனா். மக்களிடம் மனதளவில் மாற்றம் ஏற்பட்டால் அது சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நல்ல மாறுதலுக்கு உட்பட்டு பண்புள்ளவா்களாக மாற வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டு புத்தாண்டில் அதற்கான உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.