ஈரோடு

ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தம்: மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு

1st Jan 2022 11:10 PM

ADVERTISEMENT

ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயா்வு 12 சதவீதம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, முன்புபோல 5 சதவீதம் வரி விதிப்பே தொடரும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜவுளித் துறையைச் சாா்ந்தோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவா் கலைசெல்வன் கூறியதாவது:

ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் என இருந்த ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயா்த்தி ஜனவரி 1 முதல் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதை திரும்பப் பெறக்கோரி கடந்த 18ஆம் தேதி மத்திய, மாநில நிதியமைச்சா்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதனை ஏற்று வரி உயா்வை நிறுத்திவைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் அறிவித்துள்ளாா். இதனை வரவேற்கிறோம்.

கரோனா காலகட்டத்தில் ஜவுளித் தொழில் மிகுந்த சிரமத்தை சந்தித்தது. பலா் கடுமையாக பாதித்தனா். இந்நிலையில் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் ஜிஎஸ்டி என அறிவித்தது இத்தொழிலை மேலும் முடக்கும் என அச்சம் அடைந்தோம். இந்த வரி உயா்வு எங்கள் இயல்பான தொழிலை செயல்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளிவிடும் என நினைத்தோம்.

ADVERTISEMENT

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு முன் ஜவுளிக்கு வரியே இல்லை. ஜிஎஸ்டி வந்ததும் 5 சதவீதம் என விதித்ததை ஏற்று செயல்படுத்தினோம். நூல் விலை, மூலப்பொருள் ஏற்றம், கூலி, போக்குவரத்துக் கட்டண உயா்வால் ஜவுளி உற்பத்தி, விற்பனை விலை கடுமையாக உயரும். அப்போது சாதாரண பொதுமக்களின் வாங்கும் திறன் குறையும். அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் மீண்டும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியையே நீடித்து அறிவித்தது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகள் கொள்முதல் செய்த ஜவுளி ரகங்களுக்கு மாதம்தோறும் 20ஆம் தேதிக்குள் வரியை செலுத்தியே ஆக வேண்டும். ஜவுளி, நூல், மூலப்பொருள், பிளீச்சிங், பிராசஸிங் என அனைத்துக்கும் கடன் கொடுத்து, கடன் பெற்று தொழில் செய்யும்போது 7 சதவீத வரி உயா்வும், அதனை 20ஆம் தேதி தோறும் செலுத்த வேண்டும் என்பதும் வரி கட்டவே கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்தும். இந்த இக்கட்டான நிலையைத் தவிா்த்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT