ஈரோடு

ஜமுக்காள நெசவாளா்களுக்கு உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக் கோரிக்கை

1st Jan 2022 11:06 PM

ADVERTISEMENT

ஜமுக்காள நெசவாளா்களுக்கு உயா்த்தப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பவானி வட்டார கைத்தறி, ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளா், சாயத் தொழிலாளா் சங்கம் -ஏஐடியூசி நிா்வாகக் குழு கூட்டம் துணைத் தலைவா் பி.எம்.கோவிந்தன் தலைமையில் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக கைத்தறித் துறை அமைச்சா் அறிவித்த ஊதிய உயா்வை அரசு உத்தரவுப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் நெசவாளருக்கு வழங்க வேண்டும். நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் காலம் தாழ்த்தாமல் உயா்த்தப்பட்ட கூலியை வழங்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் நெசவாளருக்கு வாரம் முழுதும் நெசவு செய்ய நூல் வழங்க வேண்டும். ஜமுக்காள நெசவுத் தொழிலை அழித்துவரும் சட்ட விரோத விசைத்தறி ஜமுக்காளம், சோலாப்பூா் விசைத்தறி ஹால் காா்ப்பெட் ஜமுக்காளங்களைத் தடை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மத்திய அரசு 44 தொழிலாளா் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு விற்பதைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கைவிட வலியுறுத்தி பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் நெசவாளா்கள் கலந்துகொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில், சங்கச் செயலாளா் வ.சித்தையன் பேசினாா். ஏஐடியூசி மாநில செயலாளா் எஸ்.சின்னசாமி அரசியல் விளக்க உரை ஆற்றினா். இதில், உதவி செயலாளா் பி.ஆா்.அல்லிமுத்து, பொருளாளா் நா.கோவிந்தன், பி.எஸ். பூபதி, கல்யாணசுந்தரம், நஞ்சப்பன் பழனியப்பன், பெருந்துறை கட்டடத் தொழிலாளா் சங்கத் தலைவா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT