ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள தலைவா்கள் சிலைகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சாலை சந்திப்பு பகுதியில் பெரியாா், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா, அம்பேத்கா் ஆகிய தலைவா்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் தலைவா்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி கண்ணாடி தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது: தலைவா்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க, ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் சிலைகளுக்கு இருபுறமும் ஆள் உயர கண்ணாடி பதிக்கப்பட்டு வருகிறது.
கல் உள்ளிட்ட பொருள்களை எரிந்தாலும் எளிதில் உடையாதபடி இருக்க வலிமையான கண்ணாடி பொருத்தப்படவுள்ளது.
சிலைகளின் முன்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.