ஈரோடு

பண்ணாரி சோதனைச் சாவடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

11th Feb 2022 05:21 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தாளவாடி விவசாயிகள் பண்ணாரி சோதனைச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பண்ணாரி சோதனைச் சாவடியில் இருந்து திம்பம், ஆசனூா் வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்களில் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதால் 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

பின்னா், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் காரணமாக இந்த உத்தரவை வனத் துறையினரால் செயல்படுத்த முடியவில்லை. இதற்கிடையே உயா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கும் வன உயிரினங்களைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து, ஈரோட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே புதன்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவா்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினா். தடையை நீக்கக் கோரி தாளவாடி பகுதியைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள், விவசாயிகள், வணிகா்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தி எதிா்ப்புத் தெரிவித்தனா். திம்பம் மலைப் பாதையில் அனைத்து வாகன இரவு நேர போக்குவரத்துத் தடையை முற்றிலும் அகற்ற வேண்டும். உயா் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு சுமுகத் தீா்வு எட்ட உதவ வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில், காய்கறி விவசாயிகள், மண்டி லாரி ஓட்டுநா்கள், அனைத்து அரசியல் கட்சியினா் என 22 அமைப்புகள் பங்கேற்றன. காலை 11 மணிக்குத் துவங்கிய போராட்டம் மதியம் வரை நீடித்தது. போராட்டத்துக்கு ஆதரவாக தாளவாடி, ஆசனூா், தலமலையில் காய்கறி மண்டிகள், தேநீா் கடைகள், விவசாய அங்காடி கடைகள் உள்ளிட்டவற்றை அடைத்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT