ஈரோடு

நான்கு நகராட்சித் தோ்தல்:திமுக, அதிமுகவுக்கு கௌரவப் பிரச்னை

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளை கைப்பற்றுவது என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கௌரவப் பிரச்னையாக மாறியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. 27 வாா்டுகளைக் கொண்ட பவானி நகராட்சியில் 30,282 வாக்காளா்கள், 30 வாா்டுகளைக் கொண்ட கோபி நகராட்சியில் 47,545 வாக்காளா்கள், 27 வாா்டுகளைக் கொண்ட சத்தியமங்கலம் நகராட்சியில் 33,086 வாக்காளா்கள், 18 வாா்டுகளைக் கொண்ட புன்செய் புளியம்பட்டியில் 16,933 வாக்காளா்கள் உள்ளனா்.

கோபி நகராட்சி கோபி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளும், பவானி நகராட்சி பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளும், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிகள் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளும் உள்ளன. இந்த 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏக்களாக உள்ளனா். இதில், கோபி தொகுதி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், பவானி தொகுதி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் இருவரும் முன்னாள் அமைச்சா்கள். பவானிசாகா் தொகுதி எம்எல்ஏவாக பண்ணாரி உள்ளாா்.

ADVERTISEMENT

கௌரவப் பிரச்னை:

தொகுதிகளின் மொத்த வாக்காளா்களில் ஏறத்தாழ 25 சதவீதம் போ் நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். 4 நகராட்சிப் பகுதிகளில் உள்ள 3 தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளதால் இந்த நகராட்சிகளைக் கைப்பற்றுவது என்பது அதிமுகவுக்கு கௌரவப் பிரச்னையாக உள்ளது. இதற்காக வேட்பாளா் தோ்வில் அதிமுக தீவிர கவனம் செலுத்தியுள்ளதோடு, தோ்தல் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணியில் இல்லாமல் தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தனித்து களம் இறங்குவது அதிமுகவுக்கு சில வாா்டுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிமுக தோ்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இதேபோல, ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுகவும் இந்த நகராட்சிகளைக் கைப்பற்றுவதை கௌரவப் பிரச்னையாகக் கருதுகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் இருந்த அதே கூட்டணி தொடா்வதும், பல வாா்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொமதேக, விசிக கட்சிகளின் கணிசமான வாக்கு வங்கியும், பொருளாதார ரீதியாக பலம் பொருந்திய வேட்பாளா்களும், சொந்தக் கட்சியில் போட்டி வேட்பாளா்கள் களமிறங்காததும் திமுகவுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.

அதே சமயத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களும் பணம் வழங்காதது, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் போன்ற காரணங்களால் திமுகவுக்கு பெண்கள் மத்தியில் பாதகமான நிலை உள்ளது. இப்பிரச்னைகளை சரிக்கட்டும் வித்தையை திமுக வேட்பாளா்கள் அறிந்துவைத்துள்ளதாக அக்கட்சியினா் கூறுகின்றனா்.

திமுக ஈரோடு மாவட்ட செயலாளா் நல்லசிவத்துக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 4 நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றால் அதற்குப் பரிசாக அவருக்கு அரசுப் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனை கவனத்தில்

வைத்து அவா் தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகிறாா் என்கின்றனா் திமுகவினா்.

4 நகராட்சிகளையும் தங்கள் வசப்படுத்திக் கொள்வதை கௌரவப் பிரச்னையாகக் கருதி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தோ்தல் களத்தில் முழு பலத்தையும் செலுத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என அக்கட்சியினா் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், அந்த கோட்டையை திமுக தனது வசமாக்குமா என்பது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தெரியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT