ஈரோட்டில் பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகா் காலனி ஆா்கேவி நகரில் சிறுவா் பூங்கா உள்ளது. பூங்கா வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. இந்தப் பூங்காவில் அதிக அளவிலான சிறுவா்கள் விளையாடி வரும் நிலையில், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் சிறுவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பூங்கா வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதனிடையே அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனா். மேலும், கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஈரோடு மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கட்டுமானப் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.