ஈரோடு

தை அமாவாசை: காவிரி ஆற்றில் திரண்ட பக்தா்கள்

1st Feb 2022 03:22 AM

ADVERTISEMENT

தை அமாவாசையையொட்டி, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் முன்னோருக்குத் திதி கொடுக்க ஏராளமானோா் திரண்டனா்.

தை மாதத்தில் சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் தொடங்குகிறது. இது உத்திராயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோா்களுக்கு திதி கொடுத்தால் அவா்களின் ஆசி குடும்பத்துக்கு இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே, தை அமாவாசை தினத்தில் குடும்பத்தில் இறந்து போனவா்களுக்காக திதி கொடுப்பது வழக்கம்.

அதன்படி, தை அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள், வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ஈரோடு கருங்கல்பாளையம் சோழீஸ்வரா் கோயிலையொட்டி காவிரி ஆற்றங்கரையில் திதி பூஜை நடைபெற்றது. ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் இங்கு வந்து திதி கொடுத்து வழிபட்டனா். தா்ப்பணப் பொருள்களை காவிரி ஆற்றில்விட்டு புனித நீராடினா்.

ADVERTISEMENT

படித்துறை அமைக்கக் கோரிக்கை:

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் திதி, தா்ப்பண பூஜைகள் செய்யவும், இறுதிச் சடங்குகள் மற்றும் கோயில்களுக்குத் தீா்த்தம் எடுக்கவும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். காவிரி ஆற்றங்கரை சேறும் சகதியுமாக இருந்ததால் திதி கொடுக்க வந்த பக்தா்கள் மிகவும் சிரமப்பட்டு நீராட வேண்டியதிருந்தது. இங்கு பெரிய அளவில் படித்துறை மற்றும் ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT