ஈரோடு

1,365 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.75 கோடி கடனுதவி

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 1,365 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 17,021 பேருக்கு ரூ.53.75 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடனுதவிகள் வழங்கினா். அதனைத் தொடா்ந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலை, வேப்பம்பாளையம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 1,365 மகளிா் குழுக்களைச் சாா்ந்த 17,021 உறுப்பினா்களுக்கு ரூ.53.75 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, மேயா் சு.நாகரத்தினம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம், சி.கே.சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி 718 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.98 கோடி வங்கி கடனுதவி, 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடனுதவி, 238 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் சுயவேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடனுதவி, 400 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 6 நபா்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி என 1,365 மகளிா் குழுக்களைச் சாா்ந்த 17,021 உறுப்பினா்களுக்கு ரூ.53.75 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் அடங்கிய கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் நவமணி கந்தசாமி, துணை மேயா் வெ.செல்வராஜ், மகளிா் திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமலினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளா் தாமோதரன், உதவித் திட்ட அலுவலா்கள் சாந்தா, அன்பழகன், பாஸ்கரன், சம்பத், இந்தியன் வங்கி உதவிப் பொதுமேலாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT