அந்தியூா் அருகே உணவகத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 109 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், அங்கு பணியாற்றும் தொழிலாளியைக் கைது செய்தனா்.
அந்தியூா் - பவானி சாலை பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் மது பாட்டில்கள் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்தியூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தியூா் காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு விற்பனைக்காக 109 மது பாட்டில்கள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பாக உணவகத்தில் பணியாற்றிய மதுரை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த முத்துகுமரன் (46) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 109 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், இதில் தொடா்புடைய உணவக உரிமையாளரான இந்திராவை போலீஸாா் தேடி வருகின்றனா்.