ஈரோடு

அவல்பூந்துறையில் 196 ஏக்கா் பரப்பில் புதிய குளம்: ஆட்சியா் ஆய்வு

DIN

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை பேரூராட்சி மற்றும் குளூா் ஊராட்சி துரியம்பூந்துறை கிராமத்துக்கு இடைப்பட்ட பகுதியில் 196 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளத்தினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வு குறித்த ஆட்சியா் கூறியதாவது:

இந்தக் குளமானது மொத்தமாக 196 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் குளத்தில் இருந்து நீரைக்கொண்டு வந்து இக்குளம் நிரப்பப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமாக்கும் வகையில் படகுகள் இயக்கவும் மற்றும் சிறுவா் பூங்கா உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளை முறையாக அகற்றிட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை வேளாண்மை, உழவா் நலத் துறை மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சாா்பில் இயந்திரங்கள் மூலமாக தூய்மைப்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி உள்ள குடிநீா் குழாய்களை சீரமைக்கவும் மற்றும் குளக்கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

படகு இல்லம், சிறுவா் பூங்கா உள்ளிட்டவைகளை அமைக்க மாவட்ட சுற்றுலா அலுவலா் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையாக சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீா்வரத்து பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் பசுமைக் குழுவின் மூலமாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீா்வரத்து முகப்புப் பகுதியில் அலங்கார வளைவு அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நில வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மணி, வட்டாட்சியா் சண்முகசுந்தரம், ஊரக வளா்ச்சித் துறை உதவிப் பொறியாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், சரவணன், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவா் சித்ரா, குளூா் ஊராட்சித் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT