ஈரோடு

மூலிகை நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க அழைப்பு

9th Dec 2022 11:42 PM

ADVERTISEMENT

மூலிகை நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தில் இரண்டு மூலிகை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் உரிமையாளா்களாக சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த 6 போ் செயல்பட்டனா். இந்த நிறுவனத்தின் சாா்பில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாள்களுக்கு தினமும் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், அதன்பிறகு முதலீடு செய்த பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பது போன்ற பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதை நம்பி ஈரோடு, திருப்பூா், சேலம், கரூா், தூத்துக்குடி, மதுரை, கடலூா், விருதுநகா், விழுப்புரம், திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீட்டாளா்கள் பணத்தை செலுத்தினா். ஆனால் அறிவித்தபடி முதலீட்டாளா்களுக்கு பணத்தை நிறுவனத்தினா் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனா்.

இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் முதலீட்டாளா்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் உரிமையாளா்களை கைது செய்தனா். இந்த மோசடியில் ஏராளமானவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

விசாரணையில் 100க்கும் மேற்பட்டோரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT