ஈரோடு

ஈரோட்டுக்கு வந்தது 1,000 டன் பாரத் யூரியா

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,000 டன் பாரத் யூரியா ரயில் மூலம் வந்தடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் குறுவை பாசனத்துக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் சம்பா பாசனத்துக்கு பவானிசாகா் மற்றும் மேட்டூா் வலது கரை ஆகிய கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தவிர கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் 1,000 டன் பாரத் யூரியா உரம் மங்களூா் துறைமுகத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தடைந்தது.

ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த உரங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து உர விற்பனை நிலையங்களுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டன. இதனை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்ய யூரியா உரம் 3,017 டன், டிஏபி உரம் 1,585 டன், பொட்டாஷ் உரம் 1,499 டன், காம்ப்ளக்ஸ் உரம் 11,329 டன், சூப்பா் பாஸ்பேட் 851 டன் என தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை, இருப்பு விவரங்களை விலைப் பலகையில் எழுதி கடை முன் விவசாயிகள் அறியும்படி வைக்கவேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரம் வழங்க வேண்டும். விற்பனை முனைய கருவி மூலமே உரம் விற்பனை செய்ய வேண்டும்.

உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்புவைக்க வேண்டும். உரங்களுடன் பிறபொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT