ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்ால் ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து புதிதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவலாலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கடும் பனி பெய்து வருவதால் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு நகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள் காய்ச்சல் சரியாகாத நிலையில் தனியாா் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்கின்றனா். இதனால் தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக ஏராளமானோா் குவிந்து வருகின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு உள்ளதால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பனியினால் ஏற்படுவது வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும், காய்ச்சல் சில நாள்கள் நீடிக்கிறது எனில் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் ஆலோசனைப்படி தேவைப்படும் பரிசோதனைகள் செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிகிச்சைக்குச் சென்று பல நாள்கள் குணமாகாத நிலையில் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வராமல் காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT