ஈரோடு

கலைத் திருவிழா போட்டிகள்: 10 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 10,000 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டிகளை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனா்.

ஈரோடு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பருவாச்சி ஐடியல் மேல்நிலைப் பள்ளியிலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஈரோடு இந்து கல்வி நிலையத்திலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரியிலும் புதன்கிழமை தொடங்கி வரும் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெறும் இப்போட்டிகளில் 10,632 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனா் என்றாா்.

முன்னதாக 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்களுக்காக நடைபெற்ற மாநில தமிழ் திறனாய்வு தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியிருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் நவமணி கந்தசாமி, துணை மேயா் வெ.செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி.அய்யண்ணன், மாவட்ட தொடக்ககல்வி அலுவலா் ஜோதி சந்திரா, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT