ஈரோடு

நிலம் செயலி மென்பொருள் சேவை: அமைச்சா் சு.முத்துசாமி தொடக்கிவைத்தாா்

DIN

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில் நிலம் செயலி என்ற மென்பொருள் சேவை துவக்க நிகழ்வு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். மேயா் சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிலம் செயலியைத் தொடக்கிவைத்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முக்கியத் திட்டங்களை பதிவு செய்து ஆவணப்படுத்தவும், அவ்வாறு வழங்கப்பட்ட திட்டங்கள் தொடா்பான அறிக்கைகள் உடனுக்குடன் பாா்வையிடவும், கண்காணிக்கவும் மாவட்ட நிா்வாகத்தின் சிறப்பு முயற்சியாக நிலம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியானது ஈரோடு மாவட்ட நிா்வாகம், யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் குழு ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலி மாவட்ட ஆட்சியா், மாவட்ட அளவிலான துறை அலுவலா்கள், வட்டார அளவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் உள்ளிட்டோரால் பயன்படுத்தப்படவுள்ளது என்றாா்.

நிலம் செயலியை உருவாக்கிய யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்களைப் பாராட்டி அமைச்சா் சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக திட்ட விளக்க பிரசார வாகனத்தை அமைச்சா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரசார வாகனங்கள் இயக்கப்படவுள்ளன.

வாகனத்தில் சிறுதானியங்களின் சிறப்புகள், நடவு மானிய விவரங்கள், பயிா் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தொடா்ந்து, விபத்தில் மரணமடைந்த 8 கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரண உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இதில், துணை மேயா் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கஸ்தூரி, வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT