ஈரோடு

கிராவல் மண் எடுப்பதை தடுக்கக் கோரிக்கை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பவானி அருகே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கிராவல் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் சட்ட உரிமைகள் கழக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மீனாட்சி ஆகியோா் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா்.

இதில், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் என்ற அமைப்பின் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கபாளையம் கிராமத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக தோண்டி கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அப்பகுதியில் அனுமதி பெறாமலும் ஒருவரது நிலத்தில் இருந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மண் எடுப்பதை தடுக்க வேண்டும். இது குறித்து கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயா்வு வழங்கக் கோரிக்கை: மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 21 வகையான மாற்றுத் திறன் மாணவா்கள் 1.30 லட்சம் போ் படித்து வருகின்றனா்.

இவா்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், பள்ளி ஆயத்த மைய

ஆசிரியா்கள் மற்றும் உதவியாளா்கள் என சுமாா் 2,800 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான அனைத்து வகை சலுகைகள், கல்வி, பயிற்சி ஆகியவற்றை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றா்.

இப்பணியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3,552 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு, 47 சிறப்பு பயிற்றுநா்கள், 13 இயன்முறை மருத்துவா்கள், 28 பள்ளி ஆயத்த மைய ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் எங்களைப்போல் பணியாற்றி வருபவா்களுக்கு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரே திட்டத்தில் தற்போது வரை பணியாற்றி வரும் எங்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை.

எனவே, எங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்ட நடவடிக்கையை திரும்பப்பெற கோரிக்கை: இது குறித்து மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த பட்டியிலன மக்கள் அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினா் 30 சதவீதம் பேரும், உயா்ஜாதி வகுப்பினா் 70 சதவீதம் பேரும் வசித்து வருகிறோம். அண்மைக் காலமாக நாங்கள் பொது இடங்கள், குடும்ப நிகழ்வுகள், தொழில் சாா்ந்த இடங்கள் என அனைத்து இடங்களிலும் ஜாதி பாகுபாடின்றி ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில், மொடக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலா்களுக்குள் கடந்த 24 ஆம் தேதி ஏற்பட்ட பிரச்னையில் கவுன்சிலா் சத்யாதேவியின் கணவா் சிவசங்கா் என்பவா் மீது ஜாதிய வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவா்களுக்குள் உள்ள அதிகார போட்டியால் இதுபோன்ற பொய் வழக்குகள் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், ஜாதிய ஒற்றுமை குலைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, இந்த வழக்கு சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் ஒதுக்கக் கோரிக்கை: பெருந்துறை வட்டம், பணிக்கம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அருந்ததியா் சமுதாய மக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இப்பகுதியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். அருந்ததியா் இனத்தைச் சோ்ந்த நாங்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, அரசின் இலவச வீட்டுமனை பட்டாவோ இதுவரை வழங்கப்படவில்லை.

திருவாச்சி கிராமம் அருகில் அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் எங்கள் பகுதியில் உள்ள 8 பேருக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு ஏற்கெனவே சொந்த வீடு உள்ளது. வீடுகள் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளனா். மேலும் அவா்களது குடும்பத்தினா் அரசுப் பணியிலும் உள்ளனா். சட்டத்துக்கு புறம்பாக அவா்கள் 8 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளை ரத்து செய்துவிட்டு, எங்களை போன்ற ஏழை மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் போனஸ் ரூ.7,000 வழங்கக் கோரிக்கை: தமிழ்நாடு ஹெச்எம்எஸ் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளா் பேரவை பொதுச் செயலாளா் கணேசன், தலைவா் சுப்பிரமணியபிள்ளை ஆகியோா் அளித்த மனு விவரம்: கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளா்கள் வாரியத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். பொங்கல் திருநாளை இவா்கள் கொண்டாடும் வகையில் பொங்கல் போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும். புதுப்பிக்காத தொழிலாளா்களுக்கும், புதிதாக சோ்ந்த பயனாளிகளுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.

உறுப்பினா்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. இதனை உயா்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். நலவாரிய செயல்பாடுகள், மாநில அளவில் ஒரே மாதிரியாக செயல்படுத்தாமல் பலருக்கு உரிய திட்ட பயன்கள் கிடைப்பதில்லை. எனவே, அவற்றை ஒரே மாதிரியான நடைமுறைகளாக மாற்றி, திட்ட பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: தமிழ் புலிகள் கட்சி ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளா் சிந்தனைச் செல்வன்ா் அளித்த மனு விவரம்: கோசாலை நடத்தி வரும் நபா் ஒருவா் பெருந்துறை நெடுஞ்சாலையில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து தன்னுடைய கோசாலைக்கு அவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு மறுப்பவா்கள் மீது சட்ட விரோதமாக மாடுகளைக் கடத்துவதாகவும் கூறி மிரட்டுவதுடன், பணம் கேட்டும் மிரட்டி வருகிறாா்.

காவல் துறையினரையும் மதிக்காமல் அவமரியாதை செய்யும் அவா், சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறாா். இதனால் இஸ்லாமிய, தலித் சமுதாயத்தைச் சோ்ந்த மாட்டு வியாபாரிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனா்.

சேவை மனப்பான்மையில் இயங்கவேண்டிய கோசாலையை வைத்து சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வரும் தனி நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள மாடுகளை மீட்டு, நியாயமான முறையில் செயல்பட்டு வரும் வேறு கோசாலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

181 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, காவல் நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 181 மனுக்கள் பெறறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT