கடும் பனிப்பொழிவு மற்றும் தொடா் மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.3050க்கு சனிக்கிழமை விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து சத்தியமங்கலம் மலா் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 3 டன் ஆக இருந்த நிலையில் தற்போது தொடா் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் சந்தையில் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது.
பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.2,205க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ சனிக்கிழமை ரூ.3,050 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் கிலோ ரூ.1000 வரை அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கிலோ ரூ.1200க்கு விற்கப்பட்ட முல்லை சனிக்கிழமை ரூ.2150க்கும், செண்டுமல்லி ரூ.29 இல் இருந்து ரூ.50க்கும், சம்பங்கி கிலோ ரூ.120 இல் இருந்து ரூ.160க்கும் விற்பனையானது.