ஈரோடு

மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

4th Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஈரோடு நந்தா கலைக் கல்லூரியில் சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு பகுதியில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த காலத்தில் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் அவா்கள் வாழத் தகுதியற்ற இடம் என்பதால் ஆட்சியா் மூலமாக வேறு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு வட்டத்திலும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் கண்டறியப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியத்தை உயா்த்துவது மற்றும் இதர கோரிக்கைகள் மீது முதல்வா் நடவடிக்கை எடுப்பாா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் 134 முகாம்கள் நடத்தப்பட்டு 4,284 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் ரூ.2,000 பெற தகுதியுள்ள 1,526 மாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசிடம் இருந்து நிதி கிடைத்ததும் ரூ.2,000 வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி நடைபெற்றது. 145 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்திலே அதிக அளவில் ஆவின் நிறுவனத்தின் மூலம் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு பால் விற்பனை நிலையங்கள் அமைக்க தலா ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் இருந்து 762 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.20 கோடி கடனுதவி வழங்கப்பட்டது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, மேயா் சு.நாகரத்தினம், துணைமேயா் வி.செல்வராஜ், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.சண்முகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் நவமணி கந்தசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT