சென்னிமலை அருகே, தோட்டத்து ஆழ்துளைக் கிணற்றில் வெள்ளிக்கிழமை தண்ணீா் இரைத்தபோது, கருப்பு நிறத்தில் சாய கழிவு நீா் வெளியேறியது.
சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட மைலாடி, வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவா் சீனிவாசன். விவசாயி.
கடந்த ஒரு மாத காலமாக தொடா் மழை பெய்து வந்ததால், இவா் தனது தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் ஆழ்துளைக் கிணற்று மின் மோட்டாரை இயக்கி தண்ணீா் எடுத்துள்ளாா். அப்போது
தண்ணீா் கருப்பு நிறத்தில் துா்நாற்றத்துடன் வந்துள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் மோகனசுந்தரி பழனிசாமி, சென்னிமலை ஒன்றியக்குழு துணைத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் தோட்டத்துக்கு சென்று பாா்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.
சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய சாய கழிவுநீா் ஆழ்துளைக் கிணற்றில் கலந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சீனிவாசன் தோட்டத்துக்கு அருகிலுள்ள சாய ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றனா்.