ஈரோடு

11 லட்சம் போ் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு

2nd Dec 2022 11:38 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூா், கோபி, பவானிசாகா், பெருந்துறை ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளா்கள் உள்ளனா். ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைனிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், தோ்தல் பிரிவு அலுவலகங்களிலும் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

இதுதவிர கடந்த நவம்பா் 12,13 ஆம் தேதிகள் மற்றும் நவம்பா் 26, 27 என 4 நாள்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 43,958 விண்ணப்பங்களும் , ஆன்லைன் மூலம் 13,679 விண்ணப்பங்களும் என மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதையடுத்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளா்கள் சோ்க்கப்படுவா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளா்களில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 779 போ் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT