ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை திட்ட செயல்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

2nd Dec 2022 11:37 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கோபி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி ஆயிக்கவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.34.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த அமைச்சா் பணியாளா்களிடம் குறைகளையும் மற்றும் ஊதிய விவரங்களையும் கேட்டறிந்தாா்.

நிச்சாம்பாளையம் ஊராட்சி, நீலாக்கவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு திட்டத்தின் சாா்பில் இமயம் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் சாா்பில் பெயா் பலகை தயாரிக்கப்படுவதைப் பாா்வையிட்டு, அவா்களின் பணிகளைப் பாராட்டி இவா்களுக்கு சின்னசின்ன கட்டட வேலைகளையும் வழங்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கோபி ஊராட்சி ஒன்றியம், அயலூா் ஊராட்சி, நாமக்கல்பாளையத்தில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

அயலூா் ஊராட்சி மகளிா் கூட்டமைப்பு அலுவலகத்தில் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவித்குழு உறுப்பினா்களுக்கு தனிநபா் கடனாக 10 மகளிருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடனுதவி, குள்ளம்பாளையம் மகளிா் கூட்டமைப்புக்கு பெருங்கடனாக ரூ.40 லட்சம் கடனுதவி மற்றும் 6 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி கடனாக ரூ.65.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.

ஈரோடு குமலன்குட்டை மகளிா் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள்களின் விற்பனை மையத்தை அமைச்சா் பாா்வையிட்டு, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட கடைகளையும் பாா்வையிட்டாா்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கராண்டிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து மாலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.அமுதா, ஆணையா் தரேஸ் அகமது, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மகளிா் திட்ட மேலாண்மை இயக்குநா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், உதவி ஆட்சியா் என்.பொன்மணி, மகளிா் திட்ட கூடுதல் இயக்குநா் முத்துமீனாள், வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT