ஈரோடு

அந்தியூா், கெட்டிசமுத்திரம் ஏரிகளில் படகு இல்லம்:சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகேயுள்ள பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரிகளில் படகு இல்லங்கள் அமைப்பது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீா் கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரிகள் பெரும் பரப்பளவில் உள்ளதால், படகு இல்லங்கள் அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், பா்கூா் மலை தாமரைக்கரையில் உள்ள தாமரைக்குளத்தை மேம்படுத்திட வேண்டும் என அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இந்நிலையில், 77.7 ஹெக்டா் பரப்பளவு கொண்ட அந்தியூா் பெரிய ஏரி, 81 ஹெக்டா் பரப்பளவு கொண்ட கெட்டிசமுத்திரம் ஏரிகளில் படகு இல்லங்கள் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை விடுதி மண்டல மேலாளா் வெங்கடேஷ், உதகை படகுத் துறை மேலாளா் சாம்சன், ஈரோடு மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் மணி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் இளங்கோ, உதவிப் பொறியாளா் தமிழ்பாரத் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ஏரிகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT