ஈரோடு

நியாய விலைக் கடை பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு அனுமதிச் சீட்டு: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நியாய விலைக் கடை காலிப் பணியிட நோ்முகத் தோ்வுக்கு அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் மற்றும் ஈரோடு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய தலைவா் க.ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் 233 விற்பனையாளா் மற்றும் 10 கட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிசம்பா் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு 23 ஆம் தேதியன்றும் ஈரோடு திண்டல், வித்யா நகரிலுள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறவுள்ளது.

நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வியாழக்கிழமை (டிசம்பா் 1) முதல் ஈரோடு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

நோ்முகத் தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் தங்களது கல்வித் தகுதி, முன்னுரிமைத் தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய ஒப்பமிட்ட இரு நகல்கள், இரண்டு பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீது நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய குழுவை 0424-2214378 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT