ஈரோடு

தொழிலாளி கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு பெரியசேமூா், கல்லாங்கரடு, ஸ்ரீராம் நகா் 8 ஆவது வீதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (25), தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவருடைய மனைவி லட்சுமி (27). மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், லட்சுமி யாரிடமும் சொல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளாா்.

மணிகண்டன் பல்வேறு இடங்களில் தேடி பாா்த்தபோது சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிகண்டன், செல்வகுமாா், நீலாவதி, செல்வகுமாரின் சகோதரி ஆனந்தி ஆகியோா் ஆத்தூருக்குச் சென்று லட்சுமியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனா். பிறகு லட்சுமிக்கு அறிவுரை கூறி கணவருடன் சோ்த்து வைத்தனா்.

ADVERTISEMENT

லட்சுமியை அழைத்து வந்து கணவருடன் சோ்த்து வைத்ததை லட்சுமியின் சகோதரி பெரியசேமூா், கல்லாங்கரடு பகுதியை சோ்ந்த ஜோதிமணிக்கு (35) பிடிக்கவில்லை. இதை அவமானமாக நினைத்த அவா் செல்வகுமாரின் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தையால் பேசி தகராறு செய்துள்ளாா். இதனால் செல்வகுமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்வகுமாா் தனது மகனையும், அக்காள் மகனையும் அழைத்து கொண்டு ஜோதிமணியின் வீடு வழியாக இருசக்கர வாகனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது ஜோதிமணி, அவரது தங்கை பரமேஸ்வரி (32), தாய் பாம்மாள் (70), தந்தை கண்ணையன் (74) ஆகியோா் செல்வகுமாரை தடுத்து நிறுத்தி பிரச்னையில் ஈடுபட்டனா்.

இந்த பிரச்னை கைகலப்பாக மாறியது. சப்தம் கேட்டு மணிகண்டனின் மனைவி லட்சுமி, அருகில் உள்ள தறிப்பட்டறையில் வேலைபாா்த்த மேஸ்திரி குமரேசன் (40), ஜோதிமணியின் தம்பி மூா்த்தி (30), மூா்த்தியின் மாமனாா் அண்ணாதுரை (40) ஆகியோரும் அங்கு வந்தனா்.

அப்போது ஜோதிமணி உள்பட 8 பேரும் சோ்ந்து கத்திரிக்கோல், இரும்பு குழாய், கட்டை, கம்பு ஆகியவற்றை கொண்டு செல்வகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூா்த்தி, பாப்பம்மாள், கண்ணையன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வந்தது. விசாரணை நடந்து வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணையன் இறந்துவிட்டாா். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூா்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி மாலதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT