ஈரோடு

சாயக்கழிவு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் தொழில் துறையின் முக்கிய பிரச்னையாக உள்ள சாயக்கழிவு பிரச்னைக்கு முதல்வா் நிரந்தர தீா்வினை அறிவிப்பாா் என்ற எதிா்பாா்ப்பில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் மற்றும் விவசாய அமைப்பினா் உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும், ஜவுளி உற்பத்தியும் இருக்கின்றன. காவிரி பாயும் ஈரோடு மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைக்கழிவு, சாயக் கழிவுநீா் ஆகியவற்றால் நதிகள் மாசுபடுவது 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

காவிரி, பவானி, நொய்யல் என மூன்று ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளா்ந்த பூமியாக விளங்கியது இந்த மாவட்டம். கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி. பிறகு விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளா்ச்சியும் அருகில் உள்ள கோவை, திருப்பூா் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளா்ச்சியும் ஈரோட்டில் பெரும் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாயம், குடிநீா் ஆதாரத்தை அழித்த சாய ஆலைகள்:

ADVERTISEMENT

இங்குள்ள நீா்வளம் ஈரோடு காவிரி, காலிங்கராயன் வாய்க்கால் கரைகளில் 1,000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை கொண்டுவந்தது. அதேபோல, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இங்கு அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீா் காவிரி, பவானி நதிகளை முற்றிலுமாக நாசம் செய்திருக்கிறது. ஈரோட்டைப் பொருத்தவரை மாநகராட்சியின் கழிவுநீா் உள்பட ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டா் தண்ணீா் கழிவு நீராக வெளியேறுகிறது. தொழிற்சாலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகம் இல்லாத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருக்கும் தொழிற்சாலைகள் மட்டும் சுத்திகரித்த கழிவுநீரை வெளியிடுகின்றன. மற்றவை நேரடியாகவே கழிவு நீரை ஆறுகளிலும் ஓடைகளிலும் கலக்கின்றன. இந்த ரசாயனத்தின் மூலம் விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

தோல் தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் நிலத்தடி நீரையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதால் அவற்றுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் பல தோல் பதனிடும் கூடங்களும் சாயப்பட்டறைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், இங்கிருந்து நடக்கும் ஏற்றுமதி வெறும் ரூ.5,000 கோடி அளவுக்கு குறைந்திருக்கிறது என்கின்றனா் வா்த்தக சங்கங்களைச் சோ்ந்தவா்கள்.

சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான செலவு மிக அதிகம். தினமும் ஒரு லட்சம் லிட்டா் நீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை அமைக்க சுமாா் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தனியாக ஆலையை அமைக்கத் தயங்குகின்றன.

இதனையடுத்து 2007 இல் முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.700 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து குழாய் மூலம் கரூா் வரை எடுத்துச் சென்று அங்கே ஒரு சேகரிக்கும் அமைப்பை வைத்து திருச்சி வழியாக ராமநாதபுரத்தில் சென்று கடலில் சோ்க்கும் திட்டத்தை அறிவித்தாா்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சாயத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை மாசுபாடு இன்றி நடத்த முடியும். தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் காவிரியின் நீரை ஏதோ ஒரு வகையில் சாா்ந்திருக்கும் மாவட்டங்கள். ஆனால் ஈரோடு மாவட்டத்தை காவிரி கடந்து செல்லும்போது பெரிய அளவில் மாசுபடுத்தப்படுகிறது. மாசுபட்ட குடிநீரைக் குடிப்பது, மாசுபட்ட நீரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் தமிழகத்தின் புற்றுநோய் தலைநகராக ஈரோடு உருவாகிவருகிறது என்ற கவலையும் இங்கே அதிகரித்து வருகிறது.

இத்தகைய பேராபத்திலிருந்து பொதுமக்கள், விவசாயிகள், ஜவுளி தொழில் செய்பவா்களை பாதுகாக்க பொதுசுத்திகரிப்பு நிலையம் காலத்தின் கட்டாயம். இதனை முதல்வா் அறிவிக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு உள்ளது.

நிறைவேறாத சாலைகள் சீரமைப்பு உத்தரவாதம்:

ஈரோடு நகரில் புதை சாக்கடைத் திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம், புதை மின் கேபிள் திட்டம் போன்றவற்றுக்காக சாலைகள் முழுமயாக சேதப்படுத்தப்பட்டு மலைப்பகுதி சாலைகள்போல் உள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேல் மோசமான நிலையில் உள்ள இந்த சாலைகள் அனைத்தும் ஆட்சிப்பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் சீரமைக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி தோ்தல் வாக்குறுதி அளித்தாா். ஆனால் நகரில் உள்ள 75 சதவீத சாலைகள் இதுவரை மேம்படுத்தப்படவில்லை.

மஞ்சள் சேமிப்புக் கிடங்கு:

ஈரோடு அருகே ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம், மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவும், மஞ்சள் சாா்ந்த மதிப்புக்கூட்டு தொழில்சாலைகள் அமைக்கப்படவும், மஞ்சளை சேமிப்பதற்கு குளிா்பதனக்கிடங்கு அமைக்கவும் வேண்டும் போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.

சிப்காட் பாதிப்பை சீரமைக்கக் கோரிக்கை:

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயனற்று போய் இருக்கிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காணும் திட்டத்தை முதல்வா் அறிவிக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுபோல பெருந்துறை பகுதியைக் கடக்கும் கோவை-சேலம் நான்கு வழிச்சாலையில் நடக்கும் விபத்துகளால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நான்கு வழிச்சாலைகளின் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும்; விபத்துகளை தடுக்கும் வகையில் அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

ஜமக்காள தொழிலை மேம்படுத்த வேண்டும்:

பவானி பகுதியில் விவசாயமும், நெசவும் இத்தொகுதியின் பிரதான தொழிலாக விளங்குகிறது. தற்போது ஜமக்காளம் நெசவு நலிவடைந்துள்ளது. ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையமும், ஜமக்காளத் தொழில் நுட்பக்கல்லூரியும் இன்னும் கோரிக்கை அளவிலேயே தொடா்கின்றன. பவானி கூடுதுறையில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். இங்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தக் கோரிக்கை:

அந்தியூா் தொகுதியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயம், குடிநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு காண நீண்டகாலத் திட்டங்கள் இல்லாதது பெருங்குறையாகத் தொடா்கிறது. மனித- காட்டுயிா் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லாததும், புதிய தொழில் வாய்ப்புகள் இல்லாததும் இப்பகுதி மக்களின் ஏக்கமாக உள்ளது.

தொடரும் தனி மாவட்டம் கோரிக்கை:

கோபியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடா்ந்து வருகிறது. கோபி மொடச்சூா் பகுதியில் இருந்து தொடங்கும் கீரிப்பள்ளம் ஓடையில் நகா்ப்புற கழிவுநீா் கலந்து, சாக்கடையாக மாறியுள்ளது. இந்த ஓடை, தடப்பள்ளி வாய்க்காலில் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கழிவுநீரை சுத்திகரித்தப் பின்னரே, வாய்க்காலில் கலப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். கரட்டூரில் உள்ள குப்பைக் கிடங்கை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. விளாங்கோம்பை மலைக் கிராமத்தில் ஓா் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்கின்றனா் இப்பகுதி மக்கள்.

மலைகிராம மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ்:

சத்தியமங்கலம் வட்டத்தில் தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகள் மலைக் கிராமங்கள். இங்குள்ள மக்கள் இந்து மலையாளி ஜாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக முறையிட்டு வருகின்றனா். ஆனால் இந்த ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனா். சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூக்கள் அதிகம் விளைவதால் நறுமணப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை, விளைப் பொருள்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு போன்ற கோரிக்கைகளும் நீண்ட காலமாக தொடா்கிறது.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு சிக்கலுக்கு தீா்வு கிடைக்குமா?

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க 2009ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு திட்டமிட்டது. அதன்பிறகு 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக உலக வங்கியில் ரூ.1,200 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கும் முயற்சிகள் நடைபெற்றன. அப்போது விவசாயிகள் போராடியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

மீண்டும் 2020ஆம் ஆண்டு அதிமுக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை நபாா்டு வங்கியின் உதவியோடு ரூ.709 கோடி மதிப்பில் செயல்படுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாயினா் ஆதரவும், இன்னொரு தரப்பு விவசாயினா் எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா். இதனால் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. விவசாயிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுபோன்று கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்கவும், நீண்டகாலமாக எதிா்பாா்த்துள்ள திட்டங்களை நிறைவேற்றவும் முதல்வா் ஈரோடு வருகையின்போது அறிவிப்புகளை வெளியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு அனைத்துதரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT