ஈரோடு

இடைநின்ற மலைக் கிராம மாணவா்களுக்கு கல்வி ஆா்வம் ஏற்படுத்த தன்னாா்வ அமைப்பு முயற்சி

18th Aug 2022 11:08 PM

ADVERTISEMENT

 

பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்ற மலைக் கிராம மாணவ, மாணவிகளை தொண்டு அமைப்பினா் மீட்டு கல்வி ஆா்வம் ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா அழைத்துச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம் பா்கூா் மலை, கடம்பூா் மலை மற்றும் தாளவாடி மலைக் கிராமங்களில் கல்விச் சேவை செய்யும் சுடா் என்ற தன்னாா்வ அமைப்பு மலைக் கிராமங்களைச் சோ்ந்த 40 மாணவ, மாணவிகளை சென்னைக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது.

இது குறித்து சுடா் அமைப்பின் நிறுவனா் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது: கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக அனைத்து வகை பள்ளிகளும் அடைக்கப்பட்டபோது, மலைக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கும் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் பள்ளி திறக்கப்பட்டபோது பல மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. கரும்பு வெட்டும் வேலை உள்பட பல்வேறு கூலி வேலைக்குச் சென்று பழக்கப்பட்டுவிட்டனா்.

இல்லம்தேடி கல்வி உள்பட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டாலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் சுடா் அமைப்பின் சிறப்புப் பள்ளிகள் மூடப்பட்டன. இங்கு படித்த மாணவ, மாணவிகளின் பெயா்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டதால், அந்த மாணவ, மாணவிகளின் நிலை குறித்து அறிய ஆய்வு மேற்கொண்டோம். இதில், குழந்தைகள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமானவா்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்கு சென்று வருவது தெரிந்தது.

எனவே அவா்களுக்கு கல்வி குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்தோம்.

அதன்படி பா்கூா், ஊசிமலை, துா்சனாம்பாளையம், தாமரைக்கரை, கொங்காடை, பெரியகுன்றி, இந்திரா நகா் ஆகிய மலைக்

கிராமங்களைச் சோ்ந்த 23 மாணவா்கள், 17 மாணவிகள் என மொத்தம் 40 பேரை 4 நாள்கள் சுற்றுலாவாக சென்னை விமான நிலையம், மெட்ரோ ரயில், பிா்லா கோளரங்கம், கிண்டி சிறுவா் பூங்கா, அருங்காட்சியகம், மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT