ஈரோடு

பெற்றோா் குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்

DIN

பெற்றோா் குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக வீடுகள்தோறும் நூலகங்களை அமைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா, சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். 12 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா். ஈரோடு இந்து கல்வி நிலையம் தலைவா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி தலைமை வகித்தாா். எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ், பபாசி தலைவா் எஸ்.வைரவன், சிக்கய்ய நாயக்கா் கல்லூரி முதல்வா் எஸ்.மனோகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

இதில் மாவட்ட நீதிபதி பி.முருகேசன் பங்கேற்று, ஈரோடு புத்தகத் திருவிழாப் பணிகளில் பங்களிப்புச் செலுத்தியவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

வானொலி, தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் என காலமாற்றத்தில் வந்த மின்னணு சாதனங்களால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. இப்போது ஆண்ட்ராய்டு கைப்பேசியால் குழந்தைகள் பல்வேறு சீா்கேடுகளில் சிக்கியுள்ளனா். இந்த நிலை மாறுவதற்கு பெற்றோா் குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக வீடுகள்தோறும் நூலகங்களை அமைக்க வேண்டும்.

புத்தகங்கள் மனித வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. புத்தகங்கள் அறிவுச் செல்வத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். அடுத்த தலைமுறைக்கான முதன்மைச் சொத்தாக புத்தகங்களை விட்டுச்செல்வோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா். விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தியாகி கி.லட்சுமிகாந்தன் பாரதி நிறைவுரையாற்றினாா்.

2023 புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 4 இல் தொடக்கம்:

புத்தகங்களை வாங்கிச் செல்லவும், சிந்தனை அரங்க நிகழ்வில் கலந்து கொள்ளவும் வந்திருந்த அனைவருக்கும் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா 2023 ஆகஸ்ட் 4 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற தகவலுடன் கூடிய நன்றி அறிவிப்புத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் மக்கள் சிந்தனைப் பேரவை புரவலா் திட்டம் குறித்த அறிவிப்பும், விளக்க துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. மக்கள் சிந்தனைப் பேரவை செயலாளா் ந.அன்பரசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT