ஈரோடு

21 மாத நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

7ஆவது ஊதியக்குழு அறிவிப்பின்படி வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஓய்வூதியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிங்காரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தாமஸ் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத்தலைவா் ஜெபமாலை மேரி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில் 1-1-2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி தவணையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து சிகிச்சைகளுக்கும் கட்டணம் நிா்ணயித்து, பணமில்லா சிகிச்சையை ஓய்வூதியா்களுக்கு உறுதிப்படுத்திட வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதி சந்தாவை ரூ.80லிருந்து ரூ.150ஆக உயா்த்தியுள்ளதால் பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

7ஆவது ஊதியக்குழு அறிவிப்பின்படி 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் திருவேங்கடசாமி, பொருளாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT