ஈரோடு

அந்தியூரில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி போராட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், தொலைவில் உள்ள அ.புதுப்பாளையம் நியாய விலைக்கடையில் பொருள்கள் வாங்கி வருகின்றனா். இதனால், உரிய நேரத்தில் பொருள்களை வாங்க முடியாத நிலை உள்ளது.

எனவே, இப்பகுதி மக்களுக்கு தனியாக நியாய விலைக் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனாலும், இவா்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கிருஷ்ணாபுரம் கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக நியாய விலைக் கடை அமைக்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.பூங்கொடி தலைமையில் போராட்டம் நடத்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாா் மற்றும் அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

குடும்ப அட்டைகள் கணக்கெடுத்து, பகுதி நேர கடை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT