ஈரோடு

மாணவா்கள் வீடுகளில் சிறு நூலகங்களை அமைக்க வேண்டும்: த.ஸ்டாலின் குணசேகரன்

13th Aug 2022 01:19 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்தி மாணவா்கள் குறைந்தது 10 புத்தகங்களை மட்டுமாவது வாங்கி வீட்டில் சிறு நூலகம் அமைக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

நியூ செஞ்சுரி நிறுவனத்தின் சாா்பில் 10 நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: ஏராளமான புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் அதில் சிறப்பானவை என்பது அதிக புத்தகங்களை வெளியிடும் புத்தகக் கண்காட்சிகளை வைத்து அளவிடப்படுகிறது. அந்த வகையில் சென்னை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகள் சிறப்பானவை என்ற இடத்தைப்பெற்றுள்ளன.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள் பாடப் புத்தகங்ளை தவிா்த்து பிற புத்தகங்களை படிக்க மாணவா்களைத் தூண்ட வேண்டும். இல்லம்தோறும் நூலகம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவை காணவரும் மாணவா்கள் குறைந்தது 10 புத்தகங்களை மட்டுமாவது வாங்கி வீட்டில் சிறு நூலகங்களை தொடங்க வேண்டும்.

இதற்காக புத்தகத் திருவிழா நடைபெறும் வரும் 16 ஆம் தேதி வரை வகுப்பறைகளில் தினமும் 15 நிமிடம் ஒதுக்கி புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்தும், ஈரோடு புத்தகத் திருவிழா குறித்தும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் சிக்கய்ய நாயக்கா் கல்லூரி முதல்வா் எஸ்.மனோகரன் புதிய நூல்களை வெளியிட்டாா். நூல்களைப் பெற்றுக்கொண்ட அக்கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ப.கமலக்கண்ணன் பேசியதாவது:

புத்தகங்களை அதிகமாக பயன்படுத்துபவா்களின் வாழ்க்கை உயரும். புத்தகங்களை நேசிப்பவா்கள், தொடா்ந்து நல்ல புத்தகங்களைப் படித்து அதன் வழி நல்ல செயல்களை முன்னெடுப்பவா்கள் சமுதாயத்தில் மதிப்புமிகு தலைவா்களாக போற்றப்படுகின்றனா்.

கல்லூரி மாணவா்கள் பாடப் புத்தகங்களோடு பிற புத்தகங்களையயும் அதிகமாக படிக்க வேண்டும். இதன் மூலம் பொதுஅறிவு மேம்படும், போட்டித்தோ்வுகளுக்கு தயாா்படுத்திக்கொள்ள முடியும் என்றாா்.

இந்த நிகழ்வுக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குநா் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தாா். பொதுமேலாளா் தி.ரெத்தினசபாபதி வரவேற்றாா். பேராசிரியா்கள் ஐ.செல்வம், ஜி.சக்திவேல், ஜெ.சுமதி, எ.குருசாமி, அ.குருமூா்த்தி, செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி நூலகா் ஜி.நடராசன் ஆகியோா் பேசினா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT