ஈரோடு

விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆணையை விரைவில் வழங்கக் கோரி ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.

இதற்கான உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டுக்கான உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், வேட்டி, சேலை உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் எல்.கே.எம்.சுரேஷ் தலைமை வகித்தாா்.

பொருளாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். இதில் விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

இது குறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் தலா 1.50 கோடி வேட்டியும், சேலையும் விசைத்தறிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ரூ.493 கோடி செலவில் 225 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 67 ஆயிரம் விசைத்தறிகளில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படும்.

இதன் மூலமாக 3 லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கப்பட வேண்டிய இந்த பணிகள், இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.

இதனால் சுமாா் 30 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படாமல் உள்ளன. ஏற்கெனவே நூல் விலை உயா்வு காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

மேலும், மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT