ஈரோடு

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய ஓய்வூதியா்கள் கோரிக்கை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளைக் களைய வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ்நாடு அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலாளா் சங்கரன், பொருளாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் முடிவுற்று கடந்த ஜூலை 1 முதல் வரும் 2026 ஜூன் 30 வரை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பழைய திட்டத்தில் மாதம் ரூ.350 காப்பீட்டு கட்டணம் பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.497 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சைக்கு இருந்த காப்பீட்டு இழப்பீடு தொகை ரூ.20,000த்திலிருந்து தற்போது ரூ.30,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கா்ப்பப்பை நீக்கும் சிகிச்சைக்கு கட்டணம் ரூ.30,000த்திலிருந்து ரூ.50,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சில உயா்வுகளை வரவேற்கிறோம்.

இத்திட்டத்தில் 203 நோய்களுக்கு அறுவை சிகிச்சை, 89 பரிசோதனை முறைகள், 1,221 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் சிகிச்சை கட்டணத்தில் 75 சதவீதம் வரை திரும்ப பெறலாம் என்பதை வரவேற்கலாம்.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு காப்பீடு நிறுவனம் குறைந்த கட்டணத்தை மூன்று நிபுணா் குழு பரிந்துரை அடிப்படையில் வழங்குவாா்கள். அதிலும் மருத்துவமனையின் தரம், நகரத்தின் தன்மை, முதல் அறுவை சிகிச்சைக்கு நிா்ணயித்த கட்டணத்தைவிட இரண்டாம், மூன்றாம் சிகிச்சைக்கு குறைவு. தவிர காப்பீடு திட்டத்தில் அம்மருத்துவமனைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டி உள்ளது. அரசு நிா்ணயித்த கட்டணத்தை ஒவ்வொரு மருத்துவமனையிலும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. காப்பீட்டு நிறுவனமும் கூறுவதில்லை. அறுவை சிகிச்சை கட்டணத்தை வெளியிட வேண்டும்.

திடீா் மாரடைப்பு, விபத்து சிகிச்சையில் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சில லட்ச ரூபாய்களை செலுத்திவிட்டு காப்பீட்டு நிறுவனம் தரும் குறைந்த தொகையை பெற வேண்டி வருகிறது. எனவே காப்பீடுத் திட்டத்தில் அவா்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும்.

முதியவா்களுக்கான முழங்கால் வலி, நீரழிவு, ரத்த கொதிப்பு, தலைவலி, பல் வலி, காய்ச்சல் போன்ற நோய்கள் இத்திட்டத்தில் வராது. இதற்குப் பதில் மாதாந்திர மருத்துவப்படி ரூ.300 லிருந்து, ரூ.1,000 ஆக உயா்த்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஓய்வூதியா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோரும் இத்திட்டத்தில் இணையவுள்ளனா். இதனால் தனியாா் மருத்துவமனை, காப்பீட்டு நிறுவனங்களே லாபம் பெறுவா். எனவே இந்த குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT