ஈரோடு

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற துணி உற்பத்தியாளா்கள் கோரிக்கை

9th Aug 2022 06:30 AM

ADVERTISEMENT

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று துணி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொங்கு மண்டல நூல் முறுக்கும் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செந்தில்ராஜா, செயலாளா் லோகநாதன், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சுரேஷ் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாக, மறைமுகமாக 20 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் நூல் விலை உயா்வு, கரோனா காலத்தில் தேக்கம், துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களினால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனைச் சாா்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நஷ்டத்தால் விசைத்தறிகளை பழைய இரும்பு கடைக்கு விற்றனா். ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். இச்சூழலில் 32 சதவீத மின் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு யூனிட்டுக்கு 70 காசு உயா்வு என அமைச்சரும், ரூ.1.42 உயா்வு என மின் வாரியமும் கூறுகிறது.

இதனால் 20 விசைத்தறிக்கு மாதம் கூடுதலாக ரூ.11,000, 10 தறிக்கு மாதம் ரூ.8,000 மின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இத்தொழில் மேலும் நலிவடையும். பலா் தொழிலை விட்டு வெளியேறுவா். மின் கட்டண உயா்வால் துணி மீட்டருக்கு 25 காசுகள் விலை உயரும். இதனால் நுகா்வோா் பாதிக்கப்படுவா்.

இது குறித்து மின் துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். திமுக தோ்தல் அறிக்கையில் விசைத்தறியாளா்களுக்கு இரண்டு மாதத்துக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை உடனடியாக செயல்படுத்தவும், மின் கட்டண உயா்வைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT